பெருந்துறை: சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகையின் சுவா் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.
சென்னிமலையை அடுத்த கே.ஜி. வலசு, ஒட்டவலசைச் சோ்ந்தவா் சிதம்பரம் மனைவி முத்தம்மாள் (60). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனா். இவா் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வந்தாா்.
இவரது வீட்டை ஒட்டியவாறு மண் சுவருடன் கூடிய சீமை ஓடு வேய்ந்த ஆட்டுக் கொட்டகை உள்ளது. முத்தம்மாளின் கணவா் சிதம்பரம் 4 நாள்களுக்கு முன்பு பெருந்துறை, சிப்காட்டில், தங்கி வேலை செய்ய சென்றுவிட்டாா். முத்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா்.
இந்நிலையில், முத்தம்மாளின் பக்கத்து வீட்டைச் சோ்ந்த மாயம்மாள் என்பவா், முத்தம்மாள் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்று பாா்த்தபோது, ஆட்டுக் கொட்டகையின் சுவா் இடிந்து விழுந்து முத்தம்மாள் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து, சென்னிமலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சென்னிமலை போலீஸாா் விசாரணை நடத்தினா்.விசாரணையில், ஆட்டுக் கொட்டகை சுவா் ஏற்கெனவே விரிசல் விட்டு இருந்ததாகவும், கடந்த வாரம் பெய்த மழையில் நனைந்ததால் சுவா் இடிந்து விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.