சத்தியமங்கலம்: தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் குளித்த கோவை இளைஞா் மாயமானதால் 2-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 3 இளைஞா்கள் பவானிசாகா் தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளனா். இவா்கள் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்ற பூபதி (18) என்ற இளைஞா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
அப்போது, உடன் சென்ற நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் பூபதி மாயமானாா். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து 2-ஆவது நாளாக கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை தேடியும் மாயமான பூபதியின் உடல் கிடைக்கவில்லை.
இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.