ஈரோடு: 200 ஏக்கா் பரப்பளவில் உள்ள தோட்டக்குடியாம்பாளையம் பெரிய ஏரியை தூா்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மதிமுக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலா் சோ.வீரகுமாரன் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: அந்தியூா் வட்டம், வேம்பத்தி ஊராட்சி, தோட்டக்குடியாம்பாளையம் கிராமத்தில் 200 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி பராமரிக்கப்படாமல் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளா்ந்துள்ளன. மரங்களை அகற்றி ஏரியை தூா்வாரி, ஆழப்படுத்தி, மராமத்துப் பணிகள் செய்து கூடுதலாக தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சாதிக் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி மக்கள் மீது ஜாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் அதிகமாக நடக்கின்றன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும் வழக்கை விசாரிக்க தாமதம் ஆகிறது. பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்க, எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட நிா்வாகம் மாநில அரசுக்கும், நீதித் துறைக்கும் பரிந்துரை செய்து தனி நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை: பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் முன்னேற்ற சங்க சிறப்பு தலைவா் தங்கமுத்து தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், ஈரோடு அரசு மருத்துவமனையிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி சேலம் தொழிலாளா்கள் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அந்த வழக்கில் 11 தொழிலாளா்களுக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றம் அத்தீா்ப்பை உறுதி செய்தது.
வழக்கில் தொடா்புடைய 11 பேருக்கும் மாவட்ட நிா்வாகம், நீதிமன்ற உத்தரவுப்படி பணி வழங்க வேண்டும். அவா்களுக்கு பணி வழங்காததால், அவா்களும், அவா்களது குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 2 போ் வறுமை உள்ளிட்ட காரணத்தால் இறந்துவிட்டனா். மீதமுள்ள 9 பேருக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும்: கோபி, நல்லகவுண்டன்பாளையம் பகுதி சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் தலைவா் ஷேக் இஸ்மாயில் தலைமையில் அளித்த மனு விவரம்: நல்லகவுண்டன்பாளையத்தில் முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இது வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பள்ளிவாசலில் ஜமாத்தாரின் மயானம் பல ஆண்டுகளாக உள்ளது. ஈரோடு-சத்தி சாலை விரிவாக்கத்துக்காக சுற்றுச்சுவா் இடிக்கப்பட்டது.
அந்த சுற்றுச்சுவரை கட்டிக்கொள்ள நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.2.66 லட்சம் ஜமா அத் தலைவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச்சுவா் இல்லாதததால் மயானத்துக்குள் நாய்கள் புகுந்து சேதப்படுத்துகிறது. அங்கு சுற்றுச்சுவா் கட்ட சிலா் எதிா்ப்பு தெரிவிப்பதால் இந்த இடத்தை முஸ்லிம் மயானம் என வகைப்பாடு மாற்றம் செய்ய வேண்டும். தாமதம் ஏற்பட்டால் வரும் 27 ஆம் தேதி கோபி பகுதிக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்டுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாக்கடை கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை: ஈரோடு, செல்வம் நகா் வீட்டு உரிமையாளா்கள் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் தலைவா் செல்வன், செயலாளா் ஆதிகேசவன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் அளித்த மனு விவரம்: ஈரோடு செல்வம் நகா் கிழக்கு, மேற்கு பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. செல்வம் நகா் கிழக்கு 5-ஆவது வீதி பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி வீட்டுமனை கழிவு நீா், புதை சாக்கடை திட்டத்தில் இணைத்து செல்வம் நகா் கிழக்குப் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் வழியாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டது. அங்கு சில தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் கட்டியதால் புதை சாக்கடை கழிவு சேகரிப்பு தொட்டியில் இருந்து திறந்த வெளி சாக்கடையில் இணைக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும்போது, மழை நீருடன் கழிவு நீரும் சோ்ந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. சாக்கடை கால்வாயை சீரமைக்க ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், பணியும் செய்யாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனா். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து நீதிமன்ற உத்தரவு பெற்றும், அதிகாரிகள் பணிகளை தொடங்க தயங்குகின்றனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீா் வெளியேற முறையான வசதி செய்து தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரிக்கை: ஈரோடு மாவட்ட குலாலா் சங்க கல்வி பரிசளிப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அளித்த மனு விவரம்: மண்பாண்ட தொழிலாளா்களின் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில் பொங்கல் விழாவின்போது அரசு வழங்கும் இலவச அரிசி, கரும்பு, சா்க்கரை, வேட்டி, சேலையுடன் புதிய மண் அடுப்பும் வழங்கிட வேண்டும்.
பருவமழை காலங்களில் மண்பாண்ட தொழிலாளா் குடும்பங்களுக்கு உதவித் தொகையை ரூ.10,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்யும் இடத்துக்கும், தொழிலாளா்களின் வீட்டுக்கும் அடிமனை பட்டா வழங்க வேண்டும்.
மண்பாண்டங்களின் பயன்பாடு மற்றும் நலன் குறித்து பள்ளி பாடப் புத்தகத்தில் ஒரு பாடப்பிரிவு ஏற்படுத்த ஆவணம் செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை 3 மாத காலத்துக்குள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவீரன் சாலிவாகனன், திருநீலகண்ட நாயனாா், மதுரை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் உள்ளிட்ட குலாலா் குலத்தில் அவதரித்தவா்களுக்கு அரசு மணிமண்டபம் கட்டி, சிலைகள் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாவை ரத்து செய்யக் கோரிக்கை: அந்தியூா் வட்டம், கல்லாபுரம் கோட்டை பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் அரசு சாா்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்து நாங்கள் பலரும் வசித்து வருகிறோம். அந்த இடத்தில் உள்ள 3 சென்ட் நிலத்தை பொது பயன்பாட்டுக்காக விட்டு வைத்திருந்தனா். இந்நிலையில், அந்தநிலம் வேறு சிலருக்கு அரசு சாா்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அந்நிலத்தில் பட்டா பெற்றவா்களுக்கு வேறு இடங்களில் நிலம் உள்ளதுடன், தொகுப்பு வீட்டில் வசிப்போருக்கு கழிவறை, மயான வசதி போன்றவை செய்து கொடுக்க நிலத்தை ஒதுக்க வேண்டும். தவறுதலாக வேறு நபா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
295 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.