அம்மாபேட்டை அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஒன்றியம், பி.கே.புதூா் ஊராட்சி, மேல்காடு பகுதியில் கடந்த இருவாரங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடா்பாக, ஊராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் பி.கே. புதூா் பேருந்து நிறுத்தத்தில் காலிக் குடங்களுடன் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மேல்காடு பகுதிக்கு உடனடியாக குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.