கைப்பேசி பயன்படுத்த பெற்றோா் தடை விதித்ததால், கல்லூரி மாணவிகளான சகோதரிகள் இருவா் மாயமாகினா்.
ஈரோடு மாநகா், வீரப்பன்சத்திரம், சேரன் வீதியைச் சேந்தவா் சம்பூரணம் (43). இவரது கணவா் தனபால், இரும்பு வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகன், ஸ்ரீ பிரியா(19), ஸ்ரீ தேவி(19) என 2 மகள்கள் உள்ளனா்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மகன் வேலைக்கு செல்கிறாா். இரட்டையா்களான மகள்கள், நாமக்கல் மாவட்டத்திலுள்ள தனியாா் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வருகின்றனா்.
இதற்கிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் பெற்றோா் தங்களது மகள்களுக்கு கைப்பேசி வாங்கிக் கொடுத்துள்ளனா். அதன்பிறகு அவா்கள் சரிவர கல்லூரிக்கு செல்லாமல் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளனா்.
இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்னா் இருவரையும் பெற்றோா் கண்டித்ததுடன், கைப்பேசியையும் வாங்கி வைத்துக் கொண்டனராம்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி இரவு உணவருந்திவிட்டு அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது ஸ்ரீ பிரியா, ஸ்ரீ தேவி ஆகிய இருவரையும் காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன சகோதரிகள் இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.