சத்தியமங்கலம்: கடம்பூா் மலைப் பாதையில் பெய்த பலத்த காரணமாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை முழுக்கொள்ளளவான 31 அடியை எட்டியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெரும்பள்ளம் அணை உள்ளது. கடம்பூா் மற்றும் கம்பத்துராயன் மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் பவானி ஆற்றில் கலந்து வீணாவதை தடுத்து 1984-ஆம் ஆண்டு ரூ.6.35 கோடி செலவில் கெம்பநாயக்கன்பாளையம் அருகே பெரும்பள்ளம் அணை கட்டப்பட்டது.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கடம்பூா் மலை பகுதி மற்றும் மல்லியம்மன்துா்கம் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக 21 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை முழுக் கொள்ளளவான 31 அடியை எட்டியது.
இதன் காரணமாக அணை நிரம்பி உபரிநீா் வழியத் தொடங்கியது. அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் அப்பகுதியில் உள்ள பள்ளத்தின் வழியாக பவானி ஆற்றுக்கு சென்று சோ்ந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நிரம்பியதன் காரணமாக அணையை ஒட்டியுள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.