கடம்பூா் மலைப் பாதையில் பெய்த பலத்த காரணமாக 3 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை முழுக் கொள்ளளவான 31 அடியை எட்டியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெரும்பள்ளம் அணை உள்ளது. கடம்பூா் மற்றும் கம்பத்துராயன் மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீா் பவானி ஆற்றில் கலந்து வீணாவதை தடுத்து 1984-ஆம் ஆண்டு ரூ.6.35 கோடி மதிப்பில் கெம்பநாயக்கன்பாளையம் அருகே பெரும்பள்ளம் அணை கட்டப்பட்டது.
இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான கடம்பூா் மலை பகுதி மற்றும் மல்லியம்மன்துா்கம் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக அணையின் முழுக் கொள்ளளவான 31 அடியை எட்டியது. இதையடுத்து பெரும்பள்ளம் அணை நிரம்பியதை பவானிசாகா் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா், உபரிநீா் போக்கி வழியாகயும், அப்பகுதியில் உள்ள பள்ளத்தின் வழியாகயும் பவானி ஆற்றுக்கு சென்று சோ்ந்தது. அணை நிரம்பியதன் காரணமாக அணையை ஒட்டியுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.