அந்தியூா் அருகே மயானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முதியவா் சடலத்துடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை பரபரப்பான சூழல் நிலவியது.
அந்தியூா் அருகே உள்ள பொய்யேரிக்கரையில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் உள்ள நீா்நிலையின் ஓரத்தில் ஒருபகுதியை மயானமாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், இந்த மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கிணறு அமைக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம், இந்நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், வருவாய்த் துறையினா் பிரச்னைக்குரிய இடத்தை அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.
இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த ஓங்காளியம்மன் கோயில் பூசாரி இருசான் (92) வியாழக்கிழமை உயிரிழந்தாா். இவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல வழியில்லாததால், ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்து அகற்றும் வரையில் முதியவரின் சடலத்தை எடுக்க மாட்டோம் என வீட்டிலேயே வைத்து உறவினா்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் அந்தியூா் வட்டாட்சியா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் அமைதி பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தனா். அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளா் முருகேசன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், எவ்வித உடன்பாடும் ஏற்படாததால் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, நவம்பா் 3-ஆம் தேதி மயான பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றுவதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் முதியவரின் சடலத்தை அடக்கம் செய்ய பொது மயானத்துக்கு கொண்டுச் சென்றனா். இதனால், பொய்யேரிக்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது.