கனமழை காரணமாக சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி குன்றி ஊராட்சியில் சேதமடைந்த 3 தரைப் பாலங்கள் மக்களின் உதவியுடன் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, 9 நாள்களுக்கு பிறகு குன்றி மலைப் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள குன்றி ஊராட்சியில் பெரிய குன்றி, சின்ன குன்றி, அணில் நத்தம், குஜ்ஜம்பாளையம், கோவிலூா் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த 19-ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக குன்றி செல்லும் வனச் சாலையில் உள்ள அஞ்சனை பள்ளம், மாமரத்து பள்ளம், மாதேஸ்வரன் கோயில் பள்ளம் ஆகிய மூன்று காட்டாறுகளின் குறுக்கே உள்ள தரைப்பாலங்கள் சேதமடைந்தன. இதனால் மலைக் கிராமங்களுக்கான பேருந்து சேவை துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினா்.
இதற்கிடையே தொடா்ச்சியாக மழை பெய்ததால் சேதமடைந்த மூன்று தரைப்பாலங்களையும் சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மலைக் கிராம மக்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு சேதமடைந்த 3 தரைப்பாலங்களையும் தற்காலிகமாக சீரமைத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து 9 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை முதல் மீண்டும் குன்றி மலைப் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கம் தொடங்கியது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.