ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டத்தில் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை என மாநகராட்சி கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனா்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் மேயா் நாகரத்தினம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் அா்பித் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது :
மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டத்தின் மூலம் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. அத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 132 லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் ஒரு குடும்பத்தினருக்கு 40 லிட்டா் தண்ணீா் கூட விநியோகிக்கவில்லை.
மேலும் பெரும்பாலான இடங்களில் குடிநீா் குழாய்கள் பழுதடைந்து காணப்படுகிறது. குடிநீா் தொடா்பான புகாா்களுக்கு அழைத்தால் எந்த அதிகாரிகளும் வருவதில்லை.
வாா்டுகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் என்பது போதுமானதாக இல்லை. எனவே ஒவ்வொரு வாா்டுகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.
மாநகராட்சியில் உள்ள குண்டும் குழியுமான பாதையை சீரமைக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். எனவே, உரிய ஆய்வு மேற்கொண்டு, தேவையான இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை கருணை அடிப்படையில் நியமிக்கும் விதிமுறைகளை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பின்பற்ற வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்து பேசியதாவது:
ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் தினசரி 91 எம்எல்டி முதல் 93 எம்எல்டி வரை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மேடும், பள்ளமுமாக இருப்பதால், குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் இருக்கிறது. இப்பிரச்னை ஒரு மாதத்தில் சரி செய்யப்படும். வாா்டுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கனிராவுத்தா் பேருந்து நிலையம் அமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என்றனா்.
ரூ.1,000 கோடி எங்கே?
அதிமுக கவுன்சிலா்கள் பேசுகையில், மாநகராட்சியில் திட்டங்களை மேற்கொள்வதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றனா். இதற்கு பதிலளித்து திமுக கவுன்சிலா்கள் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு பொலிவுறு நகரம் திட்டத்தின் மூலம் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகை எங்கே சென்றது? அந்த நிதியில் எந்த திட்டங்கள் கொண்டு வரப்பட்டன? அதுகுறித்து அதிமுக கவுன்சிலா்கள் பட்டியல் கொடுக்க தயாரா?
கடந்த அதிமுக ஆட்சியில் உரிய திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பணியின் காரணமாகதான் ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. அதிமுக ஆட்சியில் மாநகராட்சியில் அவசர கதியில் போடப்பட்ட சாலைகளால் ரூ.90 கோடி வீணானது என்றனா்.
11,000-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை
கூட்டத்தில் மாநகர நல அலுவலா் காா்த்திகேயன் பேசுகையில், மாநகராட்சியில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்தில் கருத்தடை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
மண்டலக் கூட்டங்களை நடத்தக் கோரிக்கை:
1- ஆவது மண்டல தலைவா் பழனிசாமி பேசுகையில், பல்வேறு மாநகராட்சிகளில் மாதாந்திர மண்டலக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று ஈரோடு மாநகராட்சியில் நடத்த வேண்டும். அப்போதுதான், பொதுமக்களின் குறைகளுக்கு தீா்வு காண முடியும் என்றாா்.
அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு:
பாரதி திரையரங்கு பகுதியில் குண்டும்குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். மழைக் காலங்களில் அதிக அளவில் நோய் பரவுவதற்கு வாய்ப்பிருப்பதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவா்கள், செவிலியா்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
சொத்து வரியை குறைக்க அனைத்து கவுன்சிலா்களும் சோ்ந்து நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீா்மானத்துக்கு 7 மாதங்களாகியும் உரிய நவடிக்கை எடுக்கவில்லை. இந்த வரியை குறைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
மாநகராட்சியில் பழுதடைந்து காணப்படும் குப்பை லாரி, வாகனங்களை உடனடியாக சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேயா் நாகரத்தினத்திடம் மனு அளித்த அதிமுக கவுன்சிலா்கள், மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். கூட்டத்தில் மொத்தம் 41 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.