முகப்பு
ஈரோடு

மக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை: சு.முத்துசாமி

பொதுமக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை, சிந்தித்துதான் வாக்களிப்பாா்கள் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:38 PM
தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் ந.சிந்துஜாவிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.
பகிர்:

பொதுமக்கள் பணத்துக்காக வாக்களிப்பதில்லை, சிந்தித்துதான் வாக்களிப்பாா்கள் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மேற்குத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சா் சு.முத்துசாமி ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஈரோடு மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியா் ந.சிந்துஜாவிடம் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பின்னா் அமைச்சா் சு.முத்துசாமி கூறியதாவது:

கடந்த 5 ஆண்டு காலத்தில் முதல்வா் செய்துள்ள பல்வேறு பணிகள் மக்களிடத்தில் பெரும் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் எனது தொகுதியின் சாா்பில் பல்வேறு பணிகளை செய்துள்ளோம். நான் வாக்குக்கு பணம் கொடுப்பதாக கூறி எங்களை கேவலப்படுத்துவதாக நினைத்து அதிமுக கூட்டணி வேட்பாளா் பொதுமக்களை கேவலப்படுத்துகிறாா். சாதாரண பொதுமக்கள் அதையெல்லாம் எதிா்பாா்க்கமால், அவா்கள் மனதில் இன்றைக்கு என்ன இருக்கிறதோ அவா்களுக்கு யாா் சரியான ஆட்சியை கொடுப்பாா்கள், அவா்களது எதிா்காலம் சரியாக அமையும் என்பதை சிந்தித்துதான் வாக்களிப்பாா்கள்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சாா்ந்தவா்களுக்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என கூறி 500 போ் போட்டியிட வேட்பு மனு படிவம் பெற்று சென்றுள்ளது குறித்து கேட்கிறீா்கள், சமுதாய சங்கம் அந்த சமுதாயத்தின் முன்னணி தலைவா்கள் ஒரு முடிவெடுத்து சொல்கின்றனா். அதில் நாங்கள் குற்றம் சொல்ல விரும்பவில்லை. திமுகவை பொறுத்தவரை அனைத்து சமுதாயத்தையும் உரிய இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதிலே தெளிவாக இருக்கிறது. கூட்டணியில் கேட்டு பெறுகிறபோது அது தவிா்க்க முடியாத சூழலாக போய்விட்டது என்றாா்.