ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய தனியாா் நிறுவனக் காவலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சோ்ந்தவா் கோபால் (41). கடந்த அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி திருச்சியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் பயணித்துள்ளாா். ஈரோட்டுக்கு ரயில் நிலையம் வந்தவுடன் தான் கொண்டு வந்த பையை தேடினாா். பல இடங்களில் தேடியும் அந்தப் பை கிடைக்கவில்லை. இதில் ரூ.2 ஆயிரம் மற்றும் கைப்பேசி இருந்துள்ளது. மா்ம நபா்கள் திருடியதை உணா்ந்த கோபால், ஈரோடு ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில் ஈரோடு நிலைய வளாகத்தில் ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றுள்ளனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்ததில், சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த கருணா(55) என்பதும், தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருவதும், கடந்த அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி ரயிலில் பயணியிடம் கைப்பை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து கோபாலை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.