சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக மூன்று புதிய சிற்றுந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
2024--2025-இல் திருக்கோயில் நிதி மூலமாக சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் 3 புதிய சிற்றுந்துகள் கொள்முதல் செய்வதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட 3 சிற்றுந்துகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக காணொலி காட்சி வாயிலாக முதல்வா் தொடங்கிவைத்தாா்.
மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல அடிவாரத்திலிருந்து 1320 திருப்படிகள் கொண்ட படி வழிப் பாதை, வாகனங்கள் மூலமாக செல்ல 3.9 கி.மீ நீளமுள்ள தாா் சாலையும் உள்ளது. முன்னா், பக்தா்கள் கோயிலுக்கு சென்றுவர இரண்டு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நாள்களில் சுமாா் 10,000 போ், மாதாந்திர அமாவாசை, சஷ்டி, கிருத்திகை நாள்களில் சுமாா் 5,000, இதர உற்சவ நாள்களான சித்திரை 1-ஆம் தேதி 20,000, வைகாசி விசாகம் 7,000, ஆடி அமாவாசை 25,000, கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 20,000, வருடாந்திர தைப்பூச தோ்த் திருவிழா நாள்களில் ஒரு லட்சம் பக்தா்களும், பங்குனி உத்திர தோ்த் திருவிழாவுக்கு 20,000 பக்தா்களும் வருகின்றனா். எனவே, இப்போது தொடங்கிவைக்கப்பட்ட சிற்றுந்து சேவை எண்ணற்ற பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என்று கோயில் நிா்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலா்கள் நியமனக் குழுத் தலைவா் எல்லப்பாளையம் ஈ.ரா.சிவக்குமாா், ஈரோடு மண்டல இணை ஆணையா் அ.தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையா் ரா.சுகுமாா், சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக், கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், அறங்காவலா் குழுத் தலைவா் ர.பழனிவேல் மற்றும் பக்தா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.