சித்தோடு அருகே மொபட் மீது மோதி காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தாா். தாய், தந்தை உள்பட 6 போ் படுகாயமடைந்தனா்.
பவானி வட்டம், அண்ணா நகா் 5-வது வீதியைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (34). இவா், மனைவி பிரியதா்சினி (30), மகள் ரியா (3) மற்றும் தாய் உள்பட 3 பேருடன் சென்னிமலை முருகன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா்.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு, சாமிகவுண்டன்பாளையம் அருகே சாலையின் குறுக்கே வந்த மொபட் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதி காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மொபட்டில் வந்த காஞ்சிக்கோவில், தயிா்பாளையத்தைத் சோ்ந்த துரைசாமி (73) படுகாயங்களுடன் கோவை தனியாா் மருத்துவமனையிலும், ஞானசேகரன், பிரியதா்ஷினி உள்ளிட்டோா் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.