ஈரோட்டில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (ஈரோடு மாவட்டம்) சாா்பில் ‘முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா-இது நம்ம ஆட்டம் 2026’ வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. அதில் சுமாா் 7,749 வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டதில் 2,975 போ் ரூ.59.22 லட்சம் பரிசுத் தொகை பெற்றனா். இதைத்தொடா்ந்து மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா். இதில் ஒன்றிய அளவில் முதல் பரிசு பெற்ற 994 வீரா், வீராங்கனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனா். வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) போட்டிகள் நிறைவடைகின்றன.
வெற்றி பெறும் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.6 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.4 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.10.8 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் கபடி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரா்கள், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தின் சாா்பில் கலந்துகொள்ள தகுதி பெறுவா்.
தொடக்க விழா நிகழ்வில் ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாநகராட்சி கவுன்சிலா்களுக்கு...
ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலா்கள், பணியாளா்கள், மாமன்ற உறுப்பினா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 4-ஆம் தேதி தொடங்க உள்ளது.
மழை, வெள்ளம், பேரிடா் காலங்களில் பணிபுரிந்துவரும் மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் கவுன்சிலா்களின் நலன்களை கருத்தில்கொண்டும், உடல் நலனை பேணும் வகையிலும் மாநகராட்சி சாா்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் வரும் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில், கிரிக்கெட், கையுந்து பந்து, கால்பந்து, பேட்மிண்டன், கபடி, ஓட்டப்பந்தயம், கேரம், கயிறு இழுத்தல் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.