விஜயமங்கலம் அருகே அமைந்துள்ள கிருஷ்ணா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா கல்வெட்டை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை மாலைவு திறந்துவைத்தாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் அருகே பெரியவீரசங்கிலி நந்தவனத் தோட்டம் பாமா ருக்மணி சமேத ஸ்ரீ ஜெய யோக கிருஷ்ணா் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.1 ஆம் தேதி) காலை 9.01 மணியளவில் நடைபெறுகிறது. இதையொட்டி விழா கல்வெட்டை ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தான பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தாா்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் மங்கல இசை, கலச ஆவாஹனம், காலை 10.30 மணி அ ளவில் முதற் கால வேள்விகள், பகல் 1 மணி அளவில் தீபாராதனை, மாலை 6 மணியளவில் இரண்டாம் கால வேள்விகள், இரவு 10 மணிக்கு பரிவார தேவதைகள் பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல சனிக்கிழமையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணி அளவில் ஐந்தாம் கால வேள்வி, 8.45 மணி அளவில் கலசங்கள் புறப்பாடு, காலை 9.01 மணி அளவில் பரிவார தேவதைகள் கும்பாபிஷேக தீபாராதனை, காலை 9.26 மணி அளவில் விமானங்கள் மற்றும் பிரதான தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவில், மடம் சமஸ்தான பீடாதிபதிகள் பலா் பங்கேற்கிறாா்கள். இதற்கான ஏற்பாடுகளை விஜயபுரி கிருஷ்ணா் ஆலய திருப்பணி சேவா அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.