நீலகிரி மாவட்டத்தின் உதகை, அதன் சுற்றுப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழை வலுத்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியுள்ளது. இதில், தமிழக-கேரள எல்லையையொட்டியுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
உதகை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் வலுத்தும், சில இடங்களில் தூறலாகவும் மழை பெய்து வருகிறது. உதகை, சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, புதன்கிழமை பகலிலிருந்து தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்குப் பின்னர் புதன்கிழமை திறக்கப்பட்டுள்ள நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் மாணவ, மாணவிகள் முதல் நாள் பள்ளிக்குச் சென்றனர். மாலையிலும் மழை பெய்ததால் பள்ளிக் குழந்தைகள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த மழை காரணமாக விவசாயப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. கோடைக் காலத்தில் தூர்வாரப்பட்டிருந்த குளங்களில் தற்போது பெய்யும் மழை நீர் சேர்ந்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் பருவ மழை தொடங்கியதாலும், கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதாலும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரை பதிவான மழை விவரம்:
(அளவு மி.மீட்டரில்) கேத்தி- 29, அவலாஞ்சி-21, நடுவட்டம், குன்னூர் 9, கிளன்மார்கன், எமரால்டு 7, கூடலூர்-5, பர்லியார்-4, கோத்தகிரி-2, குந்தா-1, கெத்தை தலா 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.