முகப்பு
நீலகிரி

உதகையில் களைகட்டுகிறது கோடை சீசன்: கோடை விழா நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்: ஏப்ரலில் குவிந்த 3.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள்

உதகையில்  கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அரசினர்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

உதகையில்  கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கோடை விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமையிலிருந்து தொடங்குகின்றன.
நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சுற்றுலா சீசன் தற்போது களைகட்டி வருகிறது. அரசினர் தாவரவியல் பூங்காவில் மலர்கள் முழுமையாக மலராமல் மொட்டுக்களாகவே காட்சியளித்தாலும்கூட, உதகையில் நிலவும் குளிர்ச்சிக்காகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள்அதிக அளவில் குவிந்து வருகின்றனர். 
குறிப்பாக அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு கடந்த சனிக்கிழமை சுமார் 26,000 சுற்றுலாப் பயணிகளும்,  ஞாயிற்றுக்கிழமை சுமார் 19,000 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
உதகை அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 11,000 பேரும்,  ஞாயிற்றுக்கிழமை 9,000 பேரும் வருகை தந்துள்ளனர்.  
மொத்தத்தில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் ஏப்ரல் மாதத்தின் 30 நாள்களில் 3.2 லட்சம்  சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாகும்.
இந்நிலையில்  மே மாதத்தில் நடைபெறவுள்ள கோடை விழா நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோடை விழாவை சிறப்பாக நடத்திடும் வகையில்,  பல்வேறு விழாக்கள், கண்காட்சிகள், பேரணிகளை மாவட்டம் முழுவதும் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியரான ஜான் சலீவன் நவீன நீலகிரியை உருவாக்கி 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில், "அகவை 200' என்ற பெயரிலான பேரணி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்திலிருந்து தொடங்கி, அரசினர் தாவரவியல் பூங்கா வரை நடைபெறுகிறது. 
இப் பேரணியில் பல்வேறு வகையான கலை, கலாசார நிகழ்ச்சிகள்,  பழங்குடியினர்- படகர் இன மக்களின் கலாசார நடனங்கள் ஆகியவற்றோடு,  தோட்டக் கலைத் துறை சார்பில்  மலர்கள், காய்கறிகள், பழங்கள், வாசனைத் திரவியங்களுடன் கூடிய அலங்கார வாகனஅணிவகுப்பு இடம்பெறுகிறது. 
இதுதவிர மே மாதம் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை, உதகையில் அரசினர் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு 7 மணிமுதல் 9.30 மணி வரை "நைட் பஜார்' கண்காட்சி நடத்தப்படுகிறது. 
இதில் பல்வேறு வகையான உணவு அங்காடிகளுடன்,  நீலகிரி மாவட்டத்தின் தயாரிப்புகளும்,  பழங்குடியின 
மக்களின் பாரம்பரிய சால்வை  உள்ளிட்ட தயாரிப்புகளும் இடம் பெறுகின்றன.  

கண்காட்சிகள் விவரம்
கோடை சுற்றுலா சீசனை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் பலவகையான கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை குறித்த விவரம்:
1. நாய் கண்காட்சி- உதகை- மே 4, 5, 6
2. காய்கறிக் கண்காட்சி- கோத்தகிரி- மே 5, 6
3. வாசனைத் திரவியக் கண்காட்சி- கூடலூர்- மே 11, 12, 13
4. ரோஜா கண்காட்சி- உதகை- மே 12, 13
5.  உதகை மலர்க் கண்காட்சி- உதகை- மே 18, 19, 20
6. பழக் கண்காட்சி - குன்னூர்- மே 27
7. குதிரைப் பந்தயம்-  உதகை- மே 12 முதல் ஜூன் 24 வரை (10 நாள்கள்).

முழு கட்டுரையைப் படிக்க →