மஞ்சூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவரை நியமிக்கக் கோரிக்கை
மஞ்சூர் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகியும், இதுவரை மகப்பேறு மருத்துவர், ரேடியாலஜிஸ்ட்
மஞ்சூர் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகியும், இதுவரை மகப்பேறு மருத்துவர், ரேடியாலஜிஸ்ட் ஆகியோர் நியமிக்கப்படவில்லை. இந்தப் பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆல்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பிரதானத் தொழிலாக விளங்கி வரும் தேயிலைத் தொழிலைக் காக்க, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 30 வழங்க வேண்டும். குந்தா தாலுகாவிலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உளுந்து, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருள்களைத் தடையின்றி வழங்க வேண்டும்.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மூன்றாவது மாற்றுப்பாதையான மஞ்சூர் -கெத்தை-முள்ளி- வெள்ளியங்காடு- காரமடை- கோவை சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
மஞ்சூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு 11 ஆண்டுகளாகிறது. ஆனால் இங்கு அறுவைச் சிகிச்சை அறை, பிரேதப் பரிசோதனை அறை, ஐ.சி.யு, உள்நோயாளிகளுக்கான உணவு வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. உடனடியாக இந்த வசதிகளை ஏற்படுத்துவதுடன், இம் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், ரேடியாலஜிஸ்ட் ஆகியோரை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.