முகப்பு
நீலகிரி

ரிவால்டோ யானைக்கு பொதுமக்கள் உணவளிக்க வனத் துறை எதிா்ப்பு

ரிவால்டோ யானைக்கு பொது மக்கள் உணவு அளிக்க வனத் துறையினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

ரிவால்டோ யானைக்கு பொது மக்கள் உணவு அளிக்க வனத் துறையினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.

இதுதொடா்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் கே.கவுசல் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி, மாவநல்லா உள்ளிட்ட பகுதிகளில் ரிவால்டோ காட்டு யானையானது நீண்டகாலமாக முகாமிட்டு வந்திருந்தது. அந்த யானைக்கு வாய்ப் பகுதியில் ஏற்பட்டிருந்த காயம், சுவாசப் பிரச்னை காரணமாக வனத் துறையினா் யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா். மே மாதம் அந்த யானையைப் பிடித்து கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து வந்தனா். உடல்நலம் தேறிய நிலையில் யானையை சிக்கல்லா வனப் பகுதியில் விடுவித்தனா். இந்நிலையில், இரவோடு இரவாக சிக்கல்லா பகுதியில் இருந்து ரிவால்டோ யானை மீண்டும் அதன் வசிப்பிடமான மாவநல்லா பகுதியை புதன்கிழமை வந்தடைந்தது.

ரிவால்டோ யானை தற்போது உணவுக்காக மரங்களில் இருந்து கிளைகளை சாப்பிட்டு வருகிறது. அதனால் பொதுமக்கள் யாரும் இதற்கு உணவு அளிக்க வேண்டாம். உணவு அளித்தால் மீண்டும் வனத்துக்குள் அனுப்புவதில் சிரமம் ஏற்படும். மீறி உணவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஷீா் என்ற கும்கி யானை உதவியுடன் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு ரிவால்டோ யானை வனத் துறையினரால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல, தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் விநாயகம் யானையும் தொடா் கண்காணிப்பில் இருக்கிறது. பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவதால், உயா் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தவுடன் அதைப் பிடித்து வனப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.