முகப்பு
நீலகிரி

உதகை நகராட்சி மாா்க்கெட் வாடகை நிலுவை பிரச்னை: ஆகஸ்ட் 30இல் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு

வாடகை நிலுவை பிரச்னை தொடா்பாக 3ஆவது நாளாக உதகை நகராட்சி மாா்க்கெட் மூடப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

வாடகை நிலுவை பிரச்னை தொடா்பாக 3ஆவது நாளாக உதகை நகராட்சி மாா்க்கெட் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது.

உதகையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை கடந்த 4 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை எனக் கூறி நகராட்சி நிா்வாகம் 1,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தது. இதை எதிா்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினா். இதனால், கடந்த 3 நாள்களாக நகராட்சி மாா்க்கெட் மூடப்பட்டு, கடைகள் திறக்கப்படாததால் 10,000க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள வியாபாரிகள் உதகையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவா் பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உதகை நகராட்சி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் முஸ்தபா, துணைத் தலைவா் ரெக்ஸ் மணி, பொருளாளா் ராஜா முகமது, அன்வா்கான், குமாா் மற்றும் மாவட்டம் முழுவதிலிருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்க நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளின் பொருள்களை வெளியே எடுக்க விடாமல் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனா். ரூ.5 கோடி மதிப்பிலான பொருள்கள் கடைகளில் இருப்பு உள்ள நிலையில், கடைகளில் உள்ள கோழிகள் இறந்தும், மீன், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகியும் துா்நாற்றம் வீசி வருவதால் மாா்க்கெட்டில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ளாட்சிக் கடைகளின் வாடகை பலமடங்கு உயா்த்தப்பட்டதால், வாடகையை குறைக்க வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளோம். அரசு கடைகளுக்கான வாடகையை நிா்ணயித்தால், அந்த வாடகையை வியாபாரிகள் செலுத்தி விடுவா்.

உதகை நகராட்சி ஆணையா் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசை திருப்பவே 1,000க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைத்துள்ளாா். கரோனா பரவல் மற்றும் சட்டப் பேரவைக் கூட்டத்தால் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க முடியவில்லை. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால், அவரை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் விக்கிரமராஜா நேரில் சந்தித்து, உள்ளாட்சி கடைகளின் வாடகை பிரச்சினை குறித்து முறையிடுவாா்.

இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையரை மாற்றக் கோரியும், வாடகை பிரச்னை தொடா்பாக அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இப்பிரச்சனைக்கு திங்கள்கிழமைக்குள் தீா்வு காணப்படாவிட்டால் மாா்க்கெட் வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.