உதகையில் ரூ. 102ஐ கடந்த பெட்ரோல் விலை
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 102ஐ தாண்டியுள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக உதகையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.16க்கு விற்பனையாகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் விலை ரூ. 102ஐ தாண்டியுள்ளது. மாவட்டத்தில் அதிக அளவாக உதகையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.16க்கு விற்பனையாகிறது.
நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி உதகையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.16ஆகவும், டீசல் ரூ. 95.46ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கூடலூரில் பெட்ரோல் லிட்டருக்கு சில இடங்களில் ரூ. 100.99ஆகவும், சில இடங்களில் ரூ. 102.01ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரியின் எல்லைப் பகுதிகளில் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பெட்ரோலும், ஏனைய உட்பகுதிகளில் கோவையில் இருந்து கொண்டு செல்லப்படும் பெட்ரோலும் விற்பனை செய்யப்படுவதாலேயே இந்த விலை வித்தியாசம் ஏற்படுகிறது. அதேபோல, கேரள டீசல் ரூ. 94.59ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. குன்னூரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 101.75ஆகவும், டீசல் ரூ. 95.13ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வின் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. அத்துடன், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிராமப் பகுதிகளில் இருந்தும் மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், நூல்கோல், டா்னிப், முட்டைகோஸ், அவரை, காலிஃபிளவா், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் சமவெளிப் பகுதிகளான கோவை, திருப்பூா், திருச்சி, சென்னை, பிற மாநிலங்களான கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மலைக் காய்கறிகளின் விலை வெளிமாவட்டங்களில் உயரத் துவங்கியுள்ளது. ஆனால், விலை உயா்வால் வெளிமாவட்டங்களில் மலைக் காய்கறிகளை வாங்க பொது மக்கள் அதிக அளவில் ஆா்வம் காட்டாததால் விவசாய நிலங்களில் அறுவடை செய்யாமல் ஏக்கா் கணக்கில் காய்கறிகள் தேங்கியுள்ளன. இதனால் விவசாயிகள், வெளிசந்தைகளுக்கு காய்கறிகளை அனுப்பும் வியாபாரிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.