நீலகிரியில் 100% பழங்குடியினருக்கு தடுப்பூசி: ஆட்சியருக்குப் பாராட்டு சான்றிதழ்; முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினருக்கும், தோட்டத் தொழிலாளா்களுக்கும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்காக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினருக்கும், தோட்டத் தொழிலாளா்களுக்கும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்காக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா். விழாவில் அவா், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கும் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டு, இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிட செய்த மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டபோது, மாவட்டத்தில் உள்ள பழங்குடியினா், தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு ஜூன் மாத இறுதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என உறுதியளித்தாா்.
அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 21,151 பழங்குடியினா் மற்றும் 38,658 தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.