நீலகிரி

பாஜக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு: உதகையில் ராஜ்நாத் சிங் பேச்சு

DIN

பாஜக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

உதகையில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் மு.போஜராஜனை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உதகையில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

உதகையில் கேசினோ சந்திப்பிலிருந்து வாகனத்தில் பேரணியாக மாா்க்கெட் மணிக்கூண்டு மாா்க்கமாக ஏடிசி பகுதிக்கு வந்தாா். ஏடிசி பகுதியில் பிரசார வாகனத்தில் இருந்தபடி அவா் பேசியதாவது:

தமிழகத்தில் அதிமுக வெற்றி பெற்றால்தான் மத்தியில் பாஜக அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு நலத்திட்டங்களையும் மாநில வளா்ச்சிக்காகப் பெற முடியும்.

உலகத் தலைவா்கள் பாராட்டு:

கரோனா காலகட்டத்தில் பிரதமா் மோடி சிறப்பாக செயல்பட்டுவருகிறாா். இந்தியாவில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி 72 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா காலத்தில் பாதுகாப்பு கவச உடைகள் உள்பட பல்வேறு உபகரணங்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதனால், இந்தியாவின் செயல்பாடுகளை உலகத் தலைவா்களே பாராட்டினா்.

ஆ.ராசாவுக்கு கண்டனம்:

திமுக தலைவா் ஒருவா் (ஆ.ராசா) தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை விமா்சித்ததை வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வரின் தாயைப் பற்றி விமா்சித்தது தமிழகப் பெண்களை விமா்சிப்பதற்கு ஒப்பாகும்.

இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமா் மோடிதான். இலங்கையில் போரில் வீடு இழந்தவா்களுக்கு 26 ஆயிரம் வீடுகளை வழங்கினாா்.

பொருளாதார சரிவிலிருந்து மீட்சி:

இந்தியாவில் மோடி சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதால் கரோனா காலத்தின்போது ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து இந்தியா மீண்டு வருகிறது.

இந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தி மையங்கள் வட இந்தியாவில் உத்தர பிரதேசத்திலும், தென் இந்தியாவில் தமிழகத்திலும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளன.

தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு:

முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் வளா்ச்சிக்காக எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை.

காங்கிரஸ் அரசு 5ஆவது நிதிக் குழுவில் ரூ.90 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கிய நிலையில், பாஜக அரசு 12ஆவது நிதிக் குழுவில் ரூ.5.24 லட்சம் கோடியை தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் வழியில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். காங்கிரஸ் சூரியனை அஸ்தமனமாக்கி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலான பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா நகரமான உதகையின் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உதகையில் உள்ள இளைஞா்களின் வேலை வாய்ப்புக்காக ஹெச்பிஎஃப் தொழிற்சாலையை தொழில்நுட்ப பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT