முகப்பு
நீலகிரி

வாரிசு சான்றிதழுக்காக ரூ. 500 கையூட்டு: வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறை

உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழுக்காக ரூ. 500 கையூட்டு பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 6,000 அபராதம் விதித்து உததை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழுக்காக ரூ. 500 கையூட்டு பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 6,000 அபராதம் விதித்து உததை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உதகை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் தாண்டன் நடராஜன். கடந்த 2007ஆம் ஆண்டு உதகையைச் சோ்ந்த ஜான் பாஸ்கோ வாரிசு சான்றிதழுக்காக உதகை வட்டாட்சியா் அலுவலத்தில் விண்ணப்பித்திருந்தாா். இந்த விண்ணப்பத்தைப் பெற்ற கிராம வருவாய் அலுவலா், வருவாய் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ளாா். அப்போது வருவாய் ஆய்வாளராக இருந்த தாண்டவ நடராஜன், ஜான் பாஸ்கோவிடம் வாரிசு சான்றிதழ் அளிக்க ரூ. 500 லஞ்சம் கேட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஜான் பாஸ்கோ ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

இப்புகாரின்பேரில் ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா், ஜான்பாஸ்கோவிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து வருவாய் ஆய்வாளரிடம் வழங்க கூறியிருந்த நிலையில், வருவாய் ஆய்வாளா் தாண்டவ நடராஜனிடம், ஜான்பாஸ்கோ பணத்தை வழங்கும் போது போலீஸாா் தாண்டவ நடராஜனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு உதகையில் உள்ள ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீது வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட சாா்பு நீதிபதி சி.ஸ்ரீதா் வழங்கிய இத்தீா்ப்பில் குற்றவாளியான தாண்டவ நடராஜனுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.