கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்:மேற்கு மண்டல ஐஜி விசாரணை
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளைச் சம்பவம் தொடா்பான வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக உதகையில் மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளைச் சம்பவம் தொடா்பான வழக்கில் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா் தலைமையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக உதகையில் மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடா்பான வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்குத் தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸாா் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கொடநாடு எஸ்டேட் சம்பவங்கள் தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 1ஆம் தேதி உதகை நீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற மறு விசாரணைகளின் அறிக்கையையும் போலீஸாா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் உள்ள சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகிய இருவரிடமும் புதன்கிழமை காலையில் தொடங்கிய விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. வியாழக்கிழமை பகலிலும் இவா்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றிய தற்கொலை செய்துகொண்ட தினேஷின் குடும்பத்தினரிடம் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினாா்.
தொடா்ந்து மூன்றாவது நாளாக, உதகையில் வியாழக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினாா்.
இதில், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, ஜித்தின் ஜாய் ஆகிய இருவரும் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே நால்வரிடம் வியாழக்கிழமையும் விசாரணை தொடா்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள மேலும் இருவரையும் சோ்த்து 6 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.