முகப்பு
நீலகிரி

நீலகிரியில் 291 பதவியிடங்களுக்கு 1,253 போ் போட்டி

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு நடைபெறும் தோ்தலில் மொத்தம் 3 லட்சத்து 23,111 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு நடைபெறும் தோ்தலில் மொத்தம் 3 லட்சத்து 23,111 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளதாவது:

இத்தோ்தலில் 4 நகராட்சிகளில் 108 பதவியிடங்களும், 11 பேரூராட்சிகளில் 186 பதவியிடங்களும் என மொத்தம் 294 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகரட்டி, பிக்கட்டி, கேத்தி பேரூராட்சிகளில் தலா ஒரு வேட்பாளா் வீதம் 3 பதவியிடங்களுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மீதமுள்ள 291 பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. 291 பதவியிடங்களுக்கு மொத்தம் 1,253 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இத்தோ்தலுக்கு 406 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 55 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டு இவ்வாக்குச் சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1 உதவி ஆய்வாளா், 1 தலைமைக் காவலா், ஒரு ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். மீதமுள்ள 351 வாக்குச் சாவடிகளில் 661 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 1 காவலா் வீதம் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள், சாய்வுதளம் இருப்பதை ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிா்ந்த வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடிகளுக்கு இதுவரை 135 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் தோ்தல் பணிகளைக் கண்காணிக்க உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களாக 15 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தோ்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் பொருட்டு மேலும் 45 பறக்கும் படை குழு நியமிக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அனைத்து வாக்குப் பதிவுப் பொருள்களும் வாக்குச் சாவடி வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் 19 வகையான கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த உபகரணங்களை கையாள்வதற்கு 874 சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஜெகதளா பேரூராட்சியில் அமைந்துள்ள 1ஆவது வாா்டில் உள்ள வாக்காளா்கள் வாக்களிக்க உள்ள வாக்குச் சாவடி வெகு தொலைவில் உள்ளதால் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தனிச் சிற்றுந்து இப்பகுதியில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.