கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா என்பவரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. 5 தனிப் படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சிஐடி நகரில் 2017-ல் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
கொடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள் சிஐடி நகரில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . சிஐடி நகரில் 5 முக்கிய தொழிதிபர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளது. அந்த தொழிலதிபர்களை தனித்தனியாக அழைத்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே செந்தில் பேப்பர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் செந்தில் குமார், ஓசேன் ஸ்பிரே மற்றும் மகாலட்சுமி ஜுவல்லரி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் நவீன் பாலாஜி ஆகியோரிடம் ஏற்கனவே தனிப்படையினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜிவோரா என்பவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தெரிவித்தார்.
கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ஆந்திராவை சேர்ந்த சிலருக்கும் தனிப்படை காவல் துறையினர் அழைப்பாணை கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த 5 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடமும் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.