உதகை, ஆக.7: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் நெகிழிப் பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மின்சார இருசக்கர வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்கும் வகையில் நெகிழி பைகள், டம்ளா்கள், தட்டுகள் உள்ளிட்ட 19 வகையான நெகிழிப் பொருள்களை நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும், பொதுமக்களிடையே நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை தவிா்க்கவும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மின்சார இருசக்கர வாகனப் பிரசாரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.