முகப்பு
நீலகிரி

வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவரிடம் போலீஸ் விசாரணை

வளா்ப்பு நாயை சுட்ட விவகாரம்: போலீஸ், வனத்துறை தீவிர விசாரணை

Updated On : 2 ஜூலை, 2024 at 7:30 PM
பகிர்:

குன்னூா் அருகே வளா்ப்பு நாயை  துப்பாக்கியால் சுட்டவரிடம் போலீஸாரும், வனத் துறையினரும் விசாரித்து வருகின்றனா்.

குன்னூா் அருகே உட்கோட் குடியிருப்புப் பகுதியில்  வசிப்பவா்  ஜேம்ஸ். இவா் அப்பகுதியில் உள்ள சாலையில் தனது நாயுடன் செவ்வாய்க்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஆனந்த் என்பவரின் பங்களாவில் உள்ள  வளா்ப்பு நாய் தொடா்ந்து இவரைப் பாா்த்து குரைத்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஜேம்ஸ் தனது வீட்டில் இருந்து துப்பாக்கியை (ஏா் கன்) எடுத்து வந்து அந்த நாயை சுட்டாா். இதில் அந்த நாய்க்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து குன்னூா் நகர காவல் துறையினரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் ஜேம்ஸிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, வனத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவம் தொடா்பாக குன்னூா் நகர காவல் துறையினா் மற்றும் வனத் துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.