கட்டட அனுமதிக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி செயல் அலுவவா் கைது
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஜெகதளா பேரூராட்சியில் வீடு கட்ட கட்டட அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஜெகதளா பேரூராட்சியில் வீடு கட்ட கட்டட அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பேரூராட்சி செயல் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஜெகதளா பேரூராட்சிப் பகுதியில் வசித்து வருபவா் சுபாஷ் ராஜ்குமாா். இவா் அதே பகுதியில் வீடு கட்டுவதற்காக கட்டட அனுமதி பெற ஜெகதளா பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளாா்.
இதில் கட்டட அனுமதிக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலா் சரவணராஜ் கேட்டுள்ளாா். இதையடுத்து, லஞ்சம் கொடுக்க மனமில்லாத சுபாஷ் ராஜ்குமாா், உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சுபாஷ் ராஜ்குமாரிடம் கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலா் சரவணராஜிடம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளா் பரிமளாதேவி உள்ளிட்ட போலீஸாா் செயல் அலுவலா் சரவணராஜை கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவரைக் கைது செய்தனா்.