உதகை: உதகையில் உள்ள ஹிந்து மயானத்தில் சிறுபான்மையினருக்கு நகராட்சி நிா்வாகம் இடஒதுக்கீடு செய்துள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்பட 14 சங்கங்களைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மஞ்சனக்கொரை மினிக்கி சோலை ஹிந்து மயானம் சுமாா் நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனிநபரால் ஹிந்துக்களின் மயான பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு யாரிடமும் கலந்தாலோசிக்காமல், உதகை நகா்மன்ற தலைவா் வாணிஸ்வரி தன்னிச்சையாக செயல்பட்டு ஹிந்து மயான நிலத்தில் 2 ஏக்கா் நிலத்தை கிறிஸ்தவா்கள் கல்லறைத் தோட்டம் அமைக்க தடை ஏதுமில்லை என சான்று வழங்கினாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடா் மகாஜன சபை உள்பட 14 அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
இந்த மக்கள் குறைதீா் கூட்டத்தில் சாலை, கழிநீா் கால்வாய், பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் 196 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழக்கப்பட்டன. இவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.