போக்குவரத்து விதிகளை காரணம் காட்டி சரக்கு வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சரக்கு வாகன ஓட்டுநா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட சரக்கு வாகன ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் லாரன்ஸ் தலைமையில் வாடகை வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்ஸ் ஆட்டோ, பிக்கப் வேன் உள்ளிட்ட வாடகை இயக்கப்படும் சரக்கு வாகனங்களில் இரும்புக் கம்பிகள் மற்றும் குழாய்களைக் கொண்டு செல்லும்போது வாகனத்தின் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாகவும், அளவுக்கு அதிகமான எடை இருப்பதாகவும் கூறி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸாா் அதிக அபராதம் விதிக்கின்றனா்.
ஒரு வாகனத்துக்கு ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, வாகன திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, அதிக அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.