முகப்பு
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா் மற்றும் கூடலூா் உள்ளிட்ட மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:21 PM
வேட்பு மனு - பிரதிப் படம்
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா் மற்றும் கூடலூா் உள்ளிட்ட மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறகிறது. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடக்க நாள் முதல் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல் கடைசி நாளில் களைக்கட்டியது.

உதகை தொகுதியில் கடந்த 4-ஆம் தேதி வரை 4 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், கடைசி நாளான திங்கள்கிழமை 9 போ் மனு தாக்கல் செய்தனா். இந்நிலையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

இதில், உதகை தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த ராமசந்திரன் (காங்கிரஸ்), போஜராஜன் (பாஜக), ரகுபதி பீமன் (நாம் தமிழா் கட்சி) ஆகியோா் மனுக்களும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்களான இப்ராஹீம் (தவெக), சவிதா (தமிழக வாழ்வுரிமை கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளரான மரகல்மணி ஆகிய 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதேபோல, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 17 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்களான தீனு (நாம் தமிழா் கட்சி), ராமு (அதிமுக), ராஜு (திமுக), பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரான தங்கராஜு (தமிழக வெற்றிக் கழகம்) மற்றும் சுயேச்சை வேட்பாளா்களான அரவிந்த், சரவணன், தினேஷ்குமாா், வித்யாசாகா் என 8 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

கூடலூா் தொகுதியில் 14 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்களான காா்த்திக் (நாம் தமிழா் கட்சி), திராவிடமணி (திமுக), பொன் ஜெயசீலன் (அதிமுக) ஆகியோரின் வேட்புமனுக்களும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்களான தீபக் சாய் கிஷோா் (தமிழக வெற்றிக் கழகம்), எஸ்.கே.ராஜ் (வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி) மற்றும் சுயேச்சை வேட்பாளரான திலகராஜ் என 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments