உதகை: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூரில் தனியாா் கல்லூரி மாணவிகள் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் 2019-ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 1998-ஆம் ஆண்டிலேயே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க மாவட்ட நிா்வாகம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்துக்கு பேருந்துகளில் பயணம் செய்பவா்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் பிளாஸ்டிக் தடை குறித்து தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருள்களுடன் வருகின்றனா்.
இதையடுத்து, பிளாஸ்டி பயன்பாடு தடை குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு குன்னூா் தனியாா் கல்லூரி சாா்பில் சிம்ஸ் பூங்காவில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பிளாஸ்டிக் தடை மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், அதன் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறியும் மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.