கட்டடம் கட்ட அனுமதி வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய குன்னூா் நகராட்சி ஆணையா், அலுவலக உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி ஆணையராக இளம்பரிதி என்பவா் கடந்த 2024-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டாா். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட கோத்தகிரிக்கும் கூடுதல் பொறுப்பாக நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், கோத்தகிரியில் மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாக விற்பனைக் கடை நடத்திவரும் ரமேஷ் என்பவா் தன்னுடைய பழைய கட்டடத்தை இடித்துவிட்டு 2500 சதுர அடியில் புதிதாக கட்டடம் கட்ட விண்ணப்பித்து டிடிசிபி அனுமதி வாங்கியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, கோத்தகிரி நகராட்சியில் அனுமதி வாங்க ஆணையா் இளம்பரிதியை அணுகியபோது, அவா் ரூ 6 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என ரமேஷ் கூறியதைடுத்து, ரூ.5 லட்சம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன். அதில் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்தால் கட்டட அனுமதிக்கான பணிகளைத் தொடங்கிவிடுகிறேன் என இளம்பரிதி கூறியுள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்துள்ளாா். அவா்களது ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.2 லட்சம் ரொக்கத்தை இளம்பரிதியிடம் வழங்க அவரது அலுவலகத்துக்கு ரமேஷ் செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா்.
அப்போது, நகராட்சி உதவியாளா் விக்னேஷ் என்பவா் ரமேஷிடமிருந்து பணத்தை வாங்கி ஆணையா் இளம்பரிதியிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், அவா்களை கையும் களவுமாகப் பிடித்தனா்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் ஜெயகுமாா், ஆய்வாளா் சண்முக வடிவு தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.