உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசு வழங்கினாா்.
இளைஞா்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில்
தமிழ்நாடு முழுவதும் முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ எனும் தலைப்பில் 25.01.2026 முதல் 08.02.2026 வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் வட்டார அளவில் நடத்தப்பட்ட கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல், எரிபந்து ஆகிய போட்டிகளில் முதலிடம் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள், உதகை மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மண்டல முதுநிலை மேலாளா் (கோவை மண்டலம்) அருணா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அலுவலா் இந்திரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.