முதலீட்டாளர்களிடம் மோசடி: தனியார் நிறுவன சொத்துகள் நாளை ஏலம்
முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் சொத்துகளை பொது ஏலத்தில் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடம் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் சொத்துகளை பொது ஏலத்தில் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், சந்தியா பவுல்ட்ரி ஃபார்ம்ஸ் என்ற நிறுவனம் தங்களது நிறுவனத்தில் பணம் வைப்பு முதலீடு செய்தவர்களை மோசடி செய்தது தொடர்பாக, தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்புச்சட்டம் 1997-ன் கீழும், கோவை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின்படியும், மேற்படி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
வருவாய் அலுவலரால் பிப்ரவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு, ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுஏலம் நடத்தப்பட உள்ளது. சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏல நிபந்தனைகள் தொடர்பான விவரங்களை ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஏல நிபந்தனைகளுக்கு உள்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
நிறுவனத்துக்குச் சொந்தமான அசையா சொத்துகள் நிலையில் உள்ளவாறே ஏலம் விடப்படும். ஏலத்தில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தில் விண்ணப்பத்தை பிப்ரவரி 22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.