நொய்யல் ஆற்றில் எண்ணெய்க் கழிவுகளை கொட்டிய லாரி? பொதுமக்கள் சிறை பிடித்தனர்
காங்கயம் அருகே நள்ளிரவில் நொய்யல் ஆற்றில் ரசாயனம் கலந்த எண்ணெய்க் கழிவுகளைக் கொட்டியதாக லாரியை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
காங்கயம் அருகே நள்ளிரவில் நொய்யல் ஆற்றில் ரசாயனம் கலந்த எண்ணெய்க் கழிவுகளைக் கொட்டியதாக லாரியை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.
காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட புதுவெங்கரையான்பாளையம் அருகே நொய்யல் ஆற்றுப் பாலத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருப்பதைப் அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். டேங்கர் லாரியில் இருந்து ரசாயன வாடை வீசியது. இது தகவல் பரவியதும் ஊர் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.
டேங்கர் லாரியில் இருந்து கழிவுகள் ஆற்றில் திறந்து விடப்பட்டதாகக் கூறி லாரியை சிறை பிடித்தனர்.
டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்த பகுதி ஈரோடு மாவட்ட எல்லையான கொல்லன்வலசு கிராமத்துக்கு உள்பட்டதால் அந்த ஊர் மக்களும் அங்கு திரண்டனர். இது குறித்து அறச்சலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் லாரி நிறுத்தப்பட்டுள்ள பகுதி காங்கயம் போலீஸ் எல்லைக்கு உள்பட்டது எனக் கூறி காங்கயம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காங்கயம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் களத்தில் தண்ணீர் பிடிக்கும் லாரி எனத் தெரியவந்தது. லாரியை காங்கயம் காவல் நிலைத்துக்கு போலீஸார் கொண்டு சென்றனர். இந்நிலையில், ரசாயனம் கலந்த எண்ணெய்க் கழிவுகள் எதுவும் கொட்டப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் பேசி முடிக்கப்பட்டு லாரியை விடுவித்துவிட்டதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.