திருப்பூர்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

DIN

அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தரக் கோரி திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு,  மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமை வகித்தார். 
இதில், தனியார் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கைக்கோரி, திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனு விவரம்:  
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு, தனியார் சேமிப்பு நிறுவனம் அதன் கிளையை திருப்பூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டுத் தொடங்கினர்.  இதில் கூலித் தொழிலாளர்களாகிய நாங்கள் மாதம் ரூ. 100 தொடங்கி ரூ. 2000 வரை பண முதலீடு செய்தோம். முதிர்வு காலம் ஆகியும் நாங்கள் செலுத்தியத் தொகையை எங்களுக்கு வழங்கவில்லை. எங்களைப்போல பலரிடம் இந்நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடியில் செய்துள்ளது.  எனவே,  மோசடி செய்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன்,  நாங்கள் செலுத்தியப் பணத்தைத் திரும்ப பெற்றுத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.  
அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரிக்கை
இதுகுறித்து திருப்பூர், விஜயாபுரம் காளிபாளையம் அருந்ததியர் காலனி பொதுமக்கள் அளித்த மனு:  
எங்கள் பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலை,  நியாயவிலைக் கடை,  ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  எனவே,  பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எங்கள் பகுதியில் மேற்கண்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித்தர உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 
 திருப்பூர்,  கல்லாங்காடு,  ராஜா நகரைச் சேர்ந்த பேபி,  அவரது கணவர் காளியப்பன் ஆகியோர் தர்னாவில் ஈடுபட்டு கூறியதாவது: 
கடந்த 25 ஆண்டுகளாக மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறோம். இடத்தை கிரையம் பெற்றுத்தான் வீடு கட்டினோம். தற்போது அதனை பஞ்சமி நிலம் எனக் கூறுகின்றனர். இதனால் மகளுக்கு நிலத்தை பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை. ஆகவே எங்கள் இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும் என்றனர்.  
ஒடிஸா மாநில இளைஞர் தீக்குளிக்க முயற்சி
ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் இளைஞர் ஒருவர் திடீரென மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.  அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து அவரைத் தடுத்து நிறுத்தினர். 
விசாரணையில் அவர்,  ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த அபே சௌத்ரி (45) என்பதும்,  அவர் திருப்பூர், மங்கலம் சாலை, கே.ஆர்.ஆர்.தோட்டம் பகுதியில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் கடந்த மாதமாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.மேலும், அவருக்கு உரிய சம்பளம் வழங்கவில்லையாம்.  இதனால், தனது தேவைக்குப் பணம் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாகக் கூறி தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து,  போலீஸார் அவரை திருப்பூர் மத்திய காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி உரிய சம்பளத்தை பெற்றுத் தந்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT