திருப்பூர்

திருப்பூரில் கோயில் திருவிழாவில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

DIN

திருப்பூர் கோயில் திருவிழாவில் கூலிப்படையை துண்டி விட்டு  பொது மக்களைத் தாக்கியவரை போலீஸார் கைது செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 திருப்பூர் பத்மாவதிபுரம் மாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து 19ஆம் தேதி சலங்கை  ஆட்டம் நடைபெற்றபோது இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் வெளியில் இருந்து ஒரு சிலரை அந்த பகுதிக்கு அழைத்து வந்ததாகத் தெரிகிறது. அப்போது கோயில் அருகே நின்று கொண்டிருந்த அண்ணா காலனியைச் சேர்ந்த தங்கராஜ் (49), அவரது மருமகன் மனோகரன் (25) ஆகியோரை உருட்டுக் கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை மட்டும் கைது செய்ததாகத் தெரிகிறது. 
இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர்களுக்கு பத்மாவதிபுரம் மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பத்மாவதிபுரம், காந்திநகர் மக்கள் கடந்த 26ஆம் தேதி காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பத்மாவதிபுரம் பகுதியில் முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. தொடர்ந்து காந்திநகர் பகுதியில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற அனுப்பர்பாளையம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தொடர்புடையவர்கள்  கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடக்கு காவல் உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணா, போக்குவரத்து உதவி ஆணையர் கஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT