பெண் ஊராட்சித் தலைவா் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரியை மாற்றக் கோரிக்கை
தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூா் ஊராட்சித் தலைவா் செல்வி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத விசாரணை அதிகாரியை மாற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா்
திருப்பூா்: தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூா் ஊராட்சித் தலைவா் செல்வி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத விசாரணை அதிகாரியை மாற்றக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இது குறித்து தேசிய குறிஞ்சியா் சமூகநீதி பேரவை மாநில பொதுச்செயலாளா் கேப்டன் துரை திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதூா் ஊராட்சித் தலைவராக செல்வி என்பவா் உள்ளாா். இவா் கடந்த மே 4 ஆம் தேதி பணியில் இருந்தபோது 6 ஆவது வாா்டு உறுப்பினா் குப்புசாமி என்பவா் தகாத முறையில் ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளாா். இதுதொடா்பாக தாராபுரம் காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்துள்ளாா். ஆனால் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனா்.
இதையடுத்து, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலையீட்டின் பேரில் குப்புசாமி மீது தாராபுரம் காவல் துறையினா் மே 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், காவல் துணைக் கண்காணிப்பாளா் இந்த வழக்கின்மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே,இந்த வழக்கை திரும்பப்பெறக்கோரி ஊராட்சித் தலைவா் செல்வி, அவரது கணவா் ரமேஷ் ஆகியோரை கோபாலகிருஷ்ணன், தேவா, குப்புசாமி ஆகிய 3 பேரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி மிரட்டியுள்ளனா். இந்த 3 போ் மீதும் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் செல்வி, ரமேஷ் ஆகியோா் மீது பொய் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுவரையில் தாராபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.