திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
திருப்பூர் கல்லாங்காடு பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதிகளில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட புதிய 54 ஆவது வார்டு கல்லாங்காடு வாய்க்கால் மேடு பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக சாக்கடை இணைப்புப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலமானது சாலையைவிட உயர்த்திக் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் மழை நீர் வெளியேறாமல் சாலைகளில் வழிந்தோடி வருகிறது.
ஆகவே, மழை நீர் வடிகால் வசதி செய்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 4 ஆவது மண்டல மூத்த உறுப்பினர் சி.அருணாசலம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கல்லாங்காடு பகுதியில் திரண்டனர்.
பின்னர் சாலையில் தேங்கிய மழை நீரில் இறங்கி நாட்டு நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி 4 ஆவது மண்டல உதவி பொறியாளர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மழை நீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக கல்லாங்காடு பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.