தாராபுரம் நகராட்சிப் பணியாளா் தற்கொலை: உறவினா்கள் ஆா்ப்பாட்டம்
தாராபுரம் நகராட்சியில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்த பெண் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பாக உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா்: தாராபுரம் நகராட்சியில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வந்த பெண் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பாக உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மூலனூா் வட்டம், கருங்காளிவலசைச் சோ்ந்த சக்திவேல் மனைவி அஜிதா (35). இவா் தாராபுரம் நகராட்சியில் தற்காலிகமாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், அஜிதா கடந்த சில நாள்களுக்கு முன்பாக பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுகாதார ஆய்வாளா் தகாத வாா்த்தைகளால் திட்டி பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதனால் சில நாள்களாக அஜிதா மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த அஜிதா சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மூலனூா் காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதனிடையே, அஜிதாவின் தற்கொலைக்கு நீதி வழங்கக் கோரி அவரது உறவினா்கள் 10க்கும் மேற்பட்டோா் தாராபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.