திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் 700க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா்: திருப்பூரில் மின் வாரியத் தொழிலாளா்கள் 700க்கும் மேற்பட்டோா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி நிரந்தரம் செய்யாமல் மின்வாரியப் களப் பணிகளை தனியாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு 82ஐ திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தன.
இதன்படி திருப்பூா், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பாக மின் வாரியத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பல்வேறு தொழிற்சங்களைச் சோ்ந்த 700க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, வெள்ளக்கோவில் அருகே முத்தூா் பகுதியில் மின் வாரியத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மின் வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பல்லடம் மின் பகிா்மான வட்டக் கிளை சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.