முகப்பு
இந்தியா

தேர்தலுக்கு இடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைகிறார்?

அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா செய்துள்ளது பற்றி....

Updated On : 18 மார்ச், 2026 at 7:34 AM
காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய்
பகிர்:

அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அசாம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட அதிருப்தியால் பதவி விலகியுள்ள அவர், பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலாய் எழுதிய கடிதத்தில், மிகுந்த வருத்தத்துடன் இந்திய தேசிய காங்கிரஸின் அனைத்துப் பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், "என் வாழ்வின் மிக முக்கியமான கொள்கைகளில் ஒன்றை நான் கைவிட்டுவிட்டேன், அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள் குறிப்பாக அசாம் காங்கிரஸ் நிர்வாகிகள் பல விஷயங்களில் என்னை அவமதித்ததால்தான் இந்த முடிவை எடுத்தேன். காங்கிரஸ் தலைமைகூட என் மீது அனுதாபம் காட்டவில்லை. என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸுடன் தொடர்புடையவனாக இருந்ததால் நான் இப்போது மிகவும் தனிமையாகிவிட்டேன். சமீப காலமாக, வாழ்வதற்கு நான் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறேன், அதனால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பிரத்யுத் பாஜகவில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் விவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அதிருப்தி காரணமாக அவர் ராஜிநாமா செய்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பிரத்யுத் போர்டோலாயின் மகன் வரும் தேர்தலில் மார்கெரிட்டா தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 20 நாள்களுக்கு முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா செய்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

summary

Congress MP Pradyut Bordoloi Resigns, Set To Join BJP Ahead Of Assam Polls

முழு கட்டுரையைப் படிக்க →