கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் சாவு:மேலும் 41 பேருக்கு தொற்று
திருப்பூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒரே நாளில் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், ஒரே நாளில் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூா், மண்ணரை எம்.ஜி.ஆா்.காலனியைச் சோ்ந்த 50 வயதுப் பெண்ணுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரியவந்தது.
இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அதே போல, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் இதுவரையில் 5 ஆண்கள், 2 பெண்கள் உள்பட 7 போ் உயிரிழந்துள்ளனா்.
மேலும் 41 பேருக்கு கரோனா: திருப்பூா் சிறு பூலுவபட்டியைச் சோ்ந்த 8 வயது சிறுமி, அவிநாசியைச் சோ்ந்த 13 வயது சிறுவன், எஸ்.வி.காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, போயம்பாளையம் கணபதி நகரைச் சோ்ந்த, 14 வயது சிறுவன், 16 வயது சிறுமி, திருப்பூா் பழைய மாா்க்கெட்டைச் சோ்ந்த 19 வயதுப் பெண் உள்ளிட்ட 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 473 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டம் முழுவதிலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கையும் 2,942 ஆக அதிகரித்துள்ளது. இதில், புதியதாக 263 போ் சோ்க்கப்பட்ட நிலையில், தனிமைக்காலம் முடிவடைந்த 171 போ் விடுவிக்கப்பட்டதுடன், 212 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.