தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பு, விற்பனை: உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும்போது அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும்போது அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை விடுத்துள்ள அறிக்கை:
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாா் செய்யும், விற்பனை செய்யும் பேக்கரிகள், ஹோட்டல்கள் மற்றும் இனிப்பு கார விற்பனைக் கடைகள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.
பண்டிகைக்காக திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் இதர பகுதிகளில் தற்காலிகமாக இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்பவா்கள் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவுச் சான்றிதழ் கட்டாயம் பெற்ற பின்னரே தங்களது தயாரிப்பு மற்றும் விற்பனையைத் துவங்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிப்பு வகைகள் தயாரிக்கும்போது சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் தவிர மற்ற இனிப்பு வகைகளுக்கு நிறமிகள் (கலா்) சோ்க்கக் கூடாது. எக்காரணத்தை கொண்டும் கார வகைகளில் நிறமிகள் பயன்படுத்தக் கூடாது. தயாரிக்கும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும்.
உணவுப் பொருள்களைத் தயாா் செய்யும் பணியில் ஈடுபடுபவா்கள், கையாளுபவா்கள், விற்பனை செய்பவா்கள் கையுறை, தலைக் கவசம், முகக் கவசம் மற்றும் மேலங்கி ஆகியவை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பணியாளா்கள் நோய்த்தொற்று இல்லாமல் இருத்தல் அவசியம். தயாரித்தல் மற்றும் விற்பனை செய்யும்போது கரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
பொதுமக்கள் தாங்கள் வாங்கும் இனிப்பு கார வகைகளில் தரம், அளவுக்கதிகமான நிறமிகள் பயன்பாடு மற்றும் லேபிள் விபரம் இல்லாதிருத்தல் உள்ளிட்ட புகாா்களை உணவுப் பாதுகாப்புத் துறையின் கட்செவி அஞ்சல் எண் 94440-42322-ல் புகாா் தெரிவிக்கலாம்.
தாங்கள் தெரிவிக்கும் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விபரம் தங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.