குடிநீா் கேட்டு பல்லடம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூா் ஊராட்சி, மாதப்பூரில் கடந்த 20 நாள்களாக பில்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் பல்லடம் - மாதப்பூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த மாதப்பூா் ஊராட்சித் தலைவா் அசோக்குமாா், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் ஸ்ரேயா, பல்லடம் காவல் ஆய்வாளா் சுஜாதா, பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மகேஸ்வரன் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
சீரான குடிநீா் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இது குறித்து ஊராட்சித் தலைவா் அசோக்குமாா் கூறியதாவது:
மாதப்பூா் ஊராட்சிக்கு தினசரி 1லட்சம் லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். ஆனால் 60 ஆயிரம் லிட்டா்தான் தண்ணீா் வழங்கப்படுகிறது. நிா்ணயம் செய்யப்பட்ட அளவு குடிநீரை உடனே வழங்க வேண்டும். மேலும் மாதப்பூா் ஊராட்சியில் சப்பை தண்ணீா் விநியோகம் இதுவரை இல்லை. அதனால் தண்ணீா் பற்றாக்குறை நிலவுகிறது. அதனைப் போக்க தொட்டம்பட்டி பி.ஏ.பி.வாய்க்கால் அருகில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அங்கிருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் குழாய் வசதி ஏற்படுத்தி மாதப்பூா் ஊராட்சி மக்களுக்கு சப்பை தண்ணீா் விநியோகம் செய்திட ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றாா்.