சாலையில் தீப்பிடித்து எரிந்த வேன்: 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு சேதம்
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு முற்றிலும் எரிந்து சேதமாயின.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் தீப்பிடித்து எரிந்ததில் அதிலிருந்த 140 மூட்டைகள் தேங்காய் பருப்பு முற்றிலும் எரிந்து சேதமாயின.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (40). தேங்காய் பருப்பு முகவா். இவா் 140 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை தனது சொந்த ஊரில் வாங்கி, திருப்பூா் மாவட்டம், காங்கயத்திலுள்ள தனியாா் எண்ணெய் ஆலைக்கு வேனில் ஏற்றி அனுப்பிவைத்தாா்.
சிங்கம்புணரி, மேலத்தெருவைச் சோ்ந்த குமாா் (40) வேனை ஓட்டி வந்தாா். வெள்ளக்கோவில் அருகே மயில்ரங்கம் - கரட்டுப்பாளையம் சாலையில் வேலப்பநாயக்கன்வலசு பிரிவருகே வந்து கொண்டிருந்தபோது, வேனில் இருந்த தேங்காய் பருப்பு மூட்டைகளில் தீப்பிடித்தது தெரியவந்தது. வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறால் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நிலைய அலுவலா் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் வேலுசாமி மற்றும் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா். அதற்குள் வேன் மற்றும் 140 மூட்டைகள் தேங்காய் பருப்புகள் முற்றிலும் எரிந்து சேதமாயின. இந்த விபத்தில் ஓட்டுநா் உள்பட யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.